7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. திரைப்பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர்.
அருள்நிதி மற்றும் அமீர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், கதை மற்றும் கதாபாத்திரங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டப் பகுதிகளில் வழிபடப்படும் சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட காவல் தெய்வங்கள் மற்றும் குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து தலைமுறைகளாக தொடரும் சமூகப் பிரச்சினைகளை, மக்களின் வாழ்வியலோடு இணைத்து பதிவு செய்யும் ஆக்ஷன் எமோஷனல் டிராமாவாக ‘வேட்ட சாமி’ உருவாகியுள்ளது.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சாமி வந்து ஆவேசமாக ஆடும் தோற்றத்தில் தீவிரமான பார்வையுடன் அருள்நிதி காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான சாமி சிலை மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது படத்தின் கிராமிய மற்றும் ஆன்மிகப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
- Advertisement -
வில்லிசைக் கலைஞர் மாதவியின் குரலில் தொடங்கும் கிளிம்ப்ஸ், பாரம்பரிய தெய்வ வழிபாட்டை மையமாகக் கொண்டு அருள்நிதி மற்றும் அமீரின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. கிராமிய வாழ்வியலுடன் ஆன்மிக உணர்வையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கிளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘வேட்ட சாமி’ படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, அயாஸ் கான், டி.எஸ்.கே, ஓ.ஏ.கே. சுந்தர், அர்ஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பம்பர்’ படத்தை இயக்கிய M. செல்வகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 7 Miles Per Second Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக G. துரைராஜும், சண்டைப்பயிற்சியை சிறுத்தை கணேஷும் கவனித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ், படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், அருள்நிதி – அமீர் கூட்டணியின் ‘வேட்ட சாமி’ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
With all your Love & Support ♥️🙏
First look & glimpse of #VettaSaami#Ameer@7mpsProductions @directormskumar@AntonyLRuben @GhibranVaibodha @RDRajasekar @dineshashok_13 @Jegan_kaviraj #MadhaviVillisai @SamuelM64562032 @teamaimpr pic.twitter.com/Fh5IlhpW1q
— Arulnithi tamilarasu (@arulnithitamil) August 28, 2026