தமிழ் திரையுலகின் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளரான எம். அரவிந்த் குமார், தனது DroneMan Academy உடன் இணைந்து, Drone Federation of India சார்பில் நடைபெற்ற NIDAR 2025-26 நிகழ்வில் இரண்டு தேசிய அளவிலான ட்ரோன் விருதுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனைக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் பாராட்டு தெரிவித்ததுடன், NIDAR 2.0 போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து அதிக அணிகள் பங்கேற்க வேண்டும் என்றும் ஊக்கமளித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் அரவிந்த் குமார், ‘ஜனநாயகன்’, ‘பீஸ்ட்’, ‘இந்தியன் 2’, ‘LIK’, ‘வேட்டையன்’, ‘பைசன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட பல முன்னணி தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் ட்ரோன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது வான்வழி காட்சிகளால் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார்.
திரைப்படங்களுக்கான உயர்தர ட்ரோன் ஸ்டாக் ஷாட்ஸ் வழங்குவதிலும் முன்னணியில் இருக்கும் அவர், திரையுலகில் “ட்ரோன்மேன்” என்ற பெயரால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான அரவிந்த் குமார், பாகிஸ்தானின் South Asian Media School-இல் Fellow-ஆகவும் இருந்துள்ளார். 2014 முதல் 2017 வரை அமெரிக்காவில் இந்திய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக பணியாற்றிய அனுபவம், ட்ரோன் தொழில்நுட்பத்தின் மீது அவருக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா அளித்த ஊக்கத்தால், 2017-இல் தமிழ் திரைப்படத் துறையில் ட்ரோன் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார்.
திரைப்பட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு பகிர வேண்டும் என்ற நோக்கில், ZOO Studios India நிறுவனத்தின் கீழ் DroneMan Academy-யை தொடங்கி, ட்ரோன் வடிவமைப்பு, நிரலாக்கம், செயற்கை நுண்ணறிவு, திரைப்பட ஒளிப்பதிவு உள்ளிட்ட துறைகளில் நவீன பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
சென்னை வண்டலூரில் அமைக்கப்பட்டுள்ள நவீன ட்ரோன் ஆய்வகத்தின் மூலம், மாணவர்கள் நேரடியாக ட்ரோன்களை வடிவமைத்து சோதனை செய்யும் வாய்ப்பையும் அவர் உருவாக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடத்தப்படும் பயிற்சிகள் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ட்ரோன் தொழில்நுட்ப உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவரது வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற மாணவர்கள், NIDAR Drone 2025-26 தேசிய போட்டியில் இரட்டை வெள்ளி விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளனர். அந்த வெற்றிக்காக கிடைத்த பரிசுத் தொகையையும் மீண்டும் DroneMan Academy ஆய்வக வளர்ச்சிக்கே பயன்படுத்த முடிவு செய்திருப்பது, மாணவர்களின் எதிர்காலமே தனது மிகப்பெரிய முதலீடு என்பதை வெளிப்படுத்துகிறது.
திரைப்பட உலகில் 300-க்கும் மேற்பட்ட படைப்புகள், கல்வித் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம், தேசிய அளவிலான அங்கீகாரம் என பல்வேறு சாதனைகளால் கவனம் ஈர்த்துள்ள ‘ட்ரோன்மேன்’ அரவிந்த் குமார், தற்போது India’s NIDAR 2.0 போட்டிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10 அணிகளை தயார்படுத்தி வருகிறார். திரைப்படத்துறையிலும் ட்ரோன் தொழில்நுட்பக் கல்வியிலும் அடுத்த தலைமுறையை உருவாக்கும் முன்னோடியாக அவர் தொடர்ந்து பயணித்து வருகிறார்.