ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நடிகர் முத்துப்பாண்டி பேசுகையில், இது தனது முதல் மேடை என்றும், வாய்ப்பு வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். மேலும், படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளதாகவும், கீர்த்தி சுரேஷுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
நடிகர் சவுந்தரராஜா, கார்த்திக் சுப்புராஜை குறும்பட காலத்திலிருந்தே தெரியும் என்றும், அவர் மிகவும் திறமையான இயக்குநர் என்றும் கூறினார். மதுரை மீதும், அங்குள்ள மக்கள் மீதும் கார்த்திக் சுப்புராஜுக்கு தனிப்பட்ட அன்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ‘டோரதி’ படத்தில் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
கலை இயக்குநர் குமார், திண்டுக்கல் மற்றும் மதுரையில் படத்திற்கான லொகேஷன்களை தேர்வு செய்ததாகவும், பல சவால்களை எதிர்கொண்டு பணியாற்றியதாகவும் தெரிவித்தார். படம் காட்சியளவில் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகை ஜீவா, ‘டோரதி’ திரைப்படம்தான் தன்னை முதன்முறையாக உலக மேடைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினார். டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்ட அனுபவத்தை தனது வாழ்வின் முக்கியமான தருணமாக குறிப்பிட்ட அவர், இந்தப் படம் தனது வாழ்நாள் சாதனையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இளையராஜாவின் இசையில் நடித்திருப்பது கனவு நனவான தருணம் என்றும் கூறினார்.
படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, தாம் சினிமாவுக்கு வர காரணமாக இருந்த படம் ‘ஜிகர்தண்டா’ என்றும், அதே படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும் தெரிவித்தார். ‘டோரதி’ தனக்கு ஒரு மேஜிக் போன்ற அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
- Advertisement -
நடிகர் முத்துக்குமார், இந்திய சினிமாவுக்கு தேவையான முக்கியமான படம் ‘டோரதி’ என்றும், இதில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நிறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகர் ரிஷிகாந்த், தன்னை நம்பி வாய்ப்பு வழங்கிய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்தார். படத்திற்காக மதுரையில் இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்ததாகவும், இயக்குநர் தங்களை திறமையாக வழிநடத்தியதாகவும் கூறினார். மேலும், சனந்துடன் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருப்பதால் இருவரின் காம்பினேஷன் திரையில் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இளையராஜாவின் இசையில் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும் அவர் கூறினார்.
நடிகர் சனந்த், டொரன்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி’ படத்தை பார்த்த பலரும் தங்களை பாராட்டியதாகவும், அது தனது வாழ்வின் சிறப்பான தருணம் என்றும் தெரிவித்தார். கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மீண்டும் தனது குறும்பட காலத்திற்குச் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், இளையராஜாவின் இசையில் நடனமாடி, அவருடன் ஒரு பாடலிலும் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் மற்றும் இளையராஜாவின் இசையை நம்பியே இப்படத்தை பார்த்ததாகக் கூறினார். மதுரையை பின்னணியாகக் கொண்ட இப்படம் கார்த்திக் சுப்புராஜின் பாணியில் உருவாகியுள்ள கொண்டாட்டமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், ரிஷி மற்றும் சனந்தின் கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். குறுகிய நாட்களே பணியாற்றியிருந்தாலும் கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாகக் கூறினார். ரிஷி, சனந்த் ஆகியோருடன் நல்ல நட்புறவு உருவாகியுள்ளதாகவும், இளையராஜாவின் இசையில் நடிப்பது கனவு நனவான தருணம் என்றும் தெரிவித்தார். மேலும், ‘டோரதி’ உலகளவில் பேசப்படும் படமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனக்கு சினிமா மீதான ஆர்வம் வர காரணமே தான் பிறந்து வளர்ந்த மதுரை மண் என்று தெரிவித்தார். தனது படங்களில் ‘இறைவி’ தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும், அதைவிட உணர்வுபூர்வமான கதையாக ‘டோரதி’ உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
“இந்தப் படம் தொடங்கியதில் இருந்து ஒரு மேஜிக் போலவே உள்ளது. படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் திறமையாக பணியாற்றியுள்ளனர். ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான். ‘டோரதி’ படத்தின் ஆன்மாவாக இருப்பதற்கு நன்றி சார்” என கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், சனந்த் திறமையான நடிகர் என்றும், ஆடிஷன் மூலம் ரிஷியை தேர்வு செய்ததாகவும் கூறிய அவர், இருவரும் நிஜ வாழ்க்கையிலும் நண்பர்கள் என்பதால் அவர்களது கூட்டணி திரையில் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். கீர்த்தி சுரேஷ் கதையை கேட்டவுடன் ஒப்புக்கொண்டதாகவும், அவரது திரையிருப்பு படத்திற்கு கூடுதல் மதிப்பை வழங்கியுள்ளதாகவும் கூறிய கார்த்திக் சுப்புராஜ், ‘டோரதி’ தனது 10-வது படம் என்றும் தெரிவித்தார்.