இயக்குனர் அமீர் வெளியிட்ட ஜெகன் கவிராஜின் ‘ஈரம் காயாத கதைகள்’ புத்தகம்

பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர் நூலை வெளியிட, எழுத்தாளரின் பெற்றோர் முத்தையா – லலிதா தம்பதியினர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் பலரும் ஜெகன் கவிராஜின் எழுத்து, மனிதநேயம், வட்டார மொழி மீதான பற்றுதல் மற்றும் இலக்கியப் பயணத்தை பாராட்டிப் பேசினர்.

கவிதா பாரதி பேசுகையில், “இன்றைய தலைமுறையில் வட்டார மொழியில் எழுதுவது அரிதாகி வரும் நிலையில், ஜெகன் கவிராஜ் தனது மண்ணின் மொழியையும் மக்களையும் இயல்பாக பதிவு செய்துள்ளார். இந்த நூலில் உள்ள ஒன்பது கதைகளும் ஒன்றோடொன்று இணைந்த வாழ்வியல் பதிவுகளாக அமைந்துள்ளன. அனைவரும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, “ஜெகன் கவிராஜுடன் எனது நட்பு பாடல் எழுதும் வாய்ப்பின் மூலம் தொடங்கியது. அவரிடம் எப்போதும் ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கும். ‘அப்பா தீபாவளி’ என்ற கதையை வாசித்தபோது மிகவும் நெகிழ்ந்தேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் திறன் அவருக்கு உண்டு” என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் சுப்பிரமணியா சிவா, “இது வெறும் சிறுகதைத் தொகுப்பு அல்ல; ஜெகன் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகள். மனிதர்களின் அனுபவங்களை மிகைப்படுத்தாமல், இயல்பாக பதிவு செய்திருப்பது இந்த நூலின் பலம்” என பாராட்டினார்.

ஜெகன் கவிராஜ் தனது ஏற்புரையில், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் துணைநின்ற குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார். நல்ல வார்த்தைகளும் நேர்மறை எண்ணங்களுமே தனது எழுத்தின் அடித்தளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவாக பேசிய இயக்குநர் அமீர், “இந்தப் புத்தகத்திற்காக அல்ல, இந்தப் புத்தகத்தை எழுதிய மனிதருக்காகத்தான் நான் வந்துள்ளேன். பெற்றோரின் முன்னிலையில் ஒரு மனிதன் தனது சாதனையை கொண்டாடும் தருணம் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகும். ஜெகன் கவிராஜின் வாழ்க்கைப் பயணமும், அவர் அடைந்துள்ள உயரமும் பலருக்கு உத்வேகமாக இருக்கும்” என்றார்.

இலக்கியம், சினிமா மற்றும் சமூக வாழ்வியல் அனுபவங்கள் இணைந்த இந்த நிகழ்வு, ‘ஈரம் காயாத கதைகள்’ நூலின் மீது வாசகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

director ameerDirector Ameer Unveils Jagan Kaviraj's Eeram Kaayaatha Kathaigal BookEeram Kaayaatha Kathaigalஇயக்குனர் அமீர்