விமல் நடிப்பில் ‘தேசிங்கு ராஜா’ திரைப்பட வெற்றியை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் 2-ம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்துக் காண்போம்..
காவல்துறையில் பணியாற்றும் விமலுக்கும், மற்றொரு ஏரியா காவல்துறை அதிகாரி ‘குக் வித் கோமாளி’ புகழுக்கும் யார் பெரிய ஆள் என்கிற போட்டி நிலவுகிறது.
இச்சூழலில் அமைச்சரின் மகனை காப்பாற்ற வேண்டும். மேலும், கூவத்தூரில் அமைச்சர்கள் அடித்த லூட்டியான வீடியோ டிஸ்க் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து என்னென்ன நிகழ்கின்றன என்பதை நகைச்சுவைப் பூர்வமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எழில். இப்படத்தை இன்பினிட்டி கிரியேஷன் தயாரித்துள்ளது.
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி, மனம் கொத்தி பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எழில்.
அவ்வகையில், காமெடி ஜானரில் களம் இறங்கிய இப்படத்தில், ரவி மரியா, சிங்கம்புலி, சாம்ஸ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் கைகோர்த்து பயணித்திருக்கிறார். விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா வந்து, கொள்ளைழகை பொழிந்திருக்கிறார். மேலும், இன்னொரு ஹீரோவாக ஜனா இணைந்துள்ளார்.
குறிப்பாக, இப்படம் மூலம் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தென் மாவட்ட பாஷை பேசும் அரசியல்வாதியாக அறிமுகமாகி ரசிக்க வைத்திருக்கிறார். அதாவது, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேச்சு வழக்கான ‘சொன்னேன்னே.. நீ கேப்பான்னே.. நல்லா இருப்பான்னே..’ என்ற பாணியில் பேசியிருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.
முன்னதாக நாஞ்சில் பி.சி.அன்பழகன், முரளி நடிப்பில் காமராசு, அய்யா வழி மற்றும் நதிகள் நினைவதில்லை போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
‘தேசிங்கு ராஜா-2’ படத்தில் செல்வாவின் ஒளிப்பதிவும் வித்யாசாகரின் பின்னணி இசையும் நகைச்சுவை உணர்வை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில், காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.