“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்” என நடிகர் ராணவ் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறிமுகமானவர் ராணவ். தனது இயல்பான நடிப்பாலும், நேர்மையான அணுகுமுறையாலும் ரசிகர்களிடையே விரைவில் இடம்பிடித்த அவர், தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ரொமான்டிக் ஜானரில் உருவாகி, ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ராணவ் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், அவருடன் ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராணவ் கூறுகையில், “காந்தி கிருஷ்ணா சாரின் இயக்கத்தில் அறிமுகமாகுவது எனக்கு ஒரு கனவு நிறைவேறிய தருணம். அவரது படங்கள் மனித உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. குறிப்பாக ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.
‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் காதல், உண்மை, குழப்பம் மற்றும் சுயத்தை அறிதல் போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உறவுகளில் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அமைதியை புரிந்து கொள்ளும் ஒரு நபராக என் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
இன்றைய நவீன வாழ்க்கையில் உறவுகளுக்கிடையே உருவாகும் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள், உணர்ச்சி இடைவெளிகள் போன்ற பல அம்சங்களை படம் பேசுகிறது. பார்வையாளர்கள் தங்கள் அனுபவங்களுடன் இந்தக் கதையை இணைத்துப் பார்க்க முடியும். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, ஒரு உணர்வுப்பூர்வமான பயணம்” என்றார்.
இந்தப் படத்திற்கு கிரிஜா வரதராஜ் தயாரிப்பாளராகவும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து மற்றும் விவேக் எழுதியுள்ளனர். தமிழ்நாடு திரையரங்க விநியோகத்தை குகன் மேற்கொண்டுள்ளார்.