இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள பாலாஜி சக்திவேல், தற்போது ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ என்ற 12 நிமிட பைலட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் அவர், இந்தப் படத்தில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘டிஎன்ஏ’, ‘காந்தி கண்ணாடி’ மற்றும் ‘வாரண்ட்’ இணையத் தொடர் போன்ற படைப்புகளில் தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் கவனம் பெற்ற பாலாஜி சக்திவேல், தற்போது ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ மூலம் தனது கலைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஏ.ஆர். முத்துராமன் உருவாக்கியுள்ள இந்த பைலட் திரைப்படம், ஒரு காவல்துறை அதிகாரிக்கும் சாதாரண மனிதருக்கும் இடையே உருவாகும் உணர்ச்சிமிக்க மோதல், பதற்றம் மற்றும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. வெறும் 12 நிமிடங்களில் ஆழமான அனுபவத்தை வழங்கும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக குறும்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் முயற்சிகள் மூலம் தனது படைப்புத் திறனை வளர்த்துக்கொண்ட முத்துராமன், தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் ஃபிக்ஷன் ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அவரது சினிமா கனவின் முக்கியமான மைல்கல்லாக ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பாலாஜி சக்திவேலுடன் ருக்மணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், கொட்டாச்சி, ஆறு பாலா, பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு: ட்ரீம் ஃபிக்ஷன் ஸ்டுடியோஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: ஏ.ஆர். முத்துராமன்
ஒளிப்பதிவு: பிரபாகரன்
இசை: நரேந்தர்
பாடகர்: ஆண்டனி தாசன்
படத்தொகுப்பு: லெனின்
‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.