மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள காதல்-குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான புதிய வண்ணமயமான போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் அறிவிப்பு எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் புதிய போஸ்டரில், மணமக்கள் தோற்றத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் கொண்டாட்ட மனநிலையில் காணப்படுகின்றனர். தெரு முழுவதும் திருவிழா அலங்காரங்கள், வண்ணக் கொடிகள் மற்றும் உற்சாகமான கொண்டாட்ட சூழல் இடம்பெற்றுள்ளதால், படம் குடும்ப உறவுகளையும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் படைப்பாக இருக்கும் என்பதற்கான சுட்டிக்காட்டாக அமைந்துள்ளது.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இந்தப் படத்தில் கதாநாயகனாக மட்டுமின்றி கதை, திரைக்கதை எழுதி இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஜோடியாக ‘NEEK’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.
‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற வெற்றிப் படைப்புகளை வழங்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸின் அடுத்த முக்கியமான குடும்ப திரைப்படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த இளைஞர்-இளம்பெண்ணின் காதலை மையமாகக் கொண்ட Cross-Cultural Love Story ஆக உருவாகியுள்ளது. வடசென்னையின் நடுத்தர வர்க்க குடும்ப வாழ்க்கை, காதல், உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு நகரும் இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.
காதல், குடும்பம், உறவுகள் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும் மனம் வருடும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி குடும்ப ரசிகர்களின் மனதை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.