விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது.
இதில், தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்நிலையில், அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமான வில்லியாக இல்லாமல் அவரது கேரக்டர் புதுமையாக உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இப்படம் பற்றி விஜய் சேதுபதி தெரிவிக்கும்போது, ‘எனக்கு கதை பிடித்திருந்தால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த காலத் தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்?
பூரி ஜெகன்நாத் இயக்கும் படம் முழுவதும் ஆக்ஷனை கொண்டது. இதற்கு முன் இப்படியொரு படத்தில் நான் நடித்ததில்லை. இதில், தபுவுடன் முதன்முறையாக நடிக்கிறேன். அவருக்கு முக்கியமான வேடம். திறமையான ஒரு நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது.
நான் நடித்த ‘மகாராஜா’ படத்தில்தான் எனக்குக் கடினமான கதாபாத்திரம். அழுத்தமான கதைகளைக் கொண்ட படங்களில் நடிப்பதுதான் எனது பலம். அதற்காக முழுமையான பொழுதுபோக்கு படங்களில் பணியாற்ற மாட்டேன் என்று அர்த்தமல்ல’ என பேசியிருந்தார்.