நடிகை சோனா தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மதுரவாயலில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள முதியோர்களை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார்.
முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்களுடன் நேரம் செலவிட்ட அவர், அவர்களின் நலன்களை விசாரித்து, உணவு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார். முதியோர்களின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்ட சோனா, இந்த தருணத்தை தனது வாழ்க்கையின் சிறப்பான பிறந்தநாள் அனுபவமாகக் குறிப்பிட்டார்.
திரைத்துறையில் நடிகையாக மட்டுமல்லாமல், தொழில்நுட்ப அம்சங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவரான சோனா, அண்மையில் இயக்கி நடித்த ‘பஜ்ராவோ மஸ்தானி’ இசை ஆல்பம் மூலம் கவனம் பெற்றுள்ளார். பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் இணைந்து நடித்துள்ள இந்த ஆல்பத்துக்கு V2 இசையமைத்திருந்தார். ஆசிஃப் கான் ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில், ஆல்பத்தை சோனாவே இயக்கியிருந்தார்.
இதற்கிடையில், சோனா கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மற்ற விவரங்களும் விரைவில் வெளியாகவுள்ளன.
தனது புதிய திரைப்பயணத்தை தொடங்கும் நேரத்தில், பிறந்தநாளை முதியோருடன் கொண்டாடி அவர்களிடம் ஆசி பெற்றது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என சோனா தெரிவித்துள்ளார். முதியோர்களின் புன்னகையிலும் வாழ்த்துகளிலும் இறைவனின் அருளைக் கண்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.