அக்கா மகன்-மாமன் இருவருக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான் சூரி நடித்துள்ள ‘மாமன்’ படத்தின் கதை. அவரே கதையும் எழுதியுள்ளார். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார்.
இப்படம் வெளியாகி 30 நாட்களை கடந்தும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக மாறி, நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில்,
‘மாமன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 30-வது நாளை எட்டியுள்ளது. முழுக்க முழுக்க இந்த வெற்றிக்கு காரணம் உங்கள் அன்பே! சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மனதெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். முதல் நாளில் எளிமையாக துவங்கிய படத்தின் ஓட்டம், சில நாட்களிலே குடும்ப ரசிகர்களால் வரவேற்பினை பெற ஆரம்பித்தது.
குடும்பமாக அனைவரும் திரையரங்குகளில் வந்ததால், ஒரு மாபெரும் அலை பரவியது. இன்றுடன் இந்த பயணம் 30 நாட்கள் நிறைவடைந்துள்ளது. உங்களுடைய அன்பும் ஆதரவும் இல்லாமல் நிச்சயமாக இது சாத்தியமே இல்லை.
மாமன் பிரம்மாண்டமான ஆக்ஷன் படம் கிடையாது. நம் வாழ்க்கையோட இணைந்த உறவுகளுடைய தாக்கமும், அனைவரும் காணும் சின்ன சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை.
அதன் காரணமாக தான் பலரும் படத்தை பெரிதும் பாராட்டினார்கள். நம் வாழ்க்கையை போல, மனதை தொட்ட படம் என்றெல்லாம் பாராட்டு தெரிவித்தனர். இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுடைய மனதை நெகிழ செய்தது.
சக்சஸ் மீட் நடத்தவில்லையா என்ற ஆம் நடத்தவில்லை. நம்முடைய உண்மையான வெற்றிக் கொண்டாட்டம். ஒவ்வொரு நாளும் உங்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளே. அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியம் கிடையாது. எனக்கு உங்களுடைய அன்பே புதிய உற்சாகம். அதுவே என்னை தூண்டி சிறந்த படங்களை வழங்க தர உத்வேகம் அளிக்கும்’ என சூரி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.