‘தி டார்க் ஹெவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையோர மர்மக் கொலைகளை மையமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர் ‘தி டார்க் ஹெவன்’ ஜூலை 17-ல் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் புதிய பாணியிலான க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் வரும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியிலும், நாட்டார் கதைகளின் மர்மத் தன்மையையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் நடைபெறும் மர்மமான தொடர் கொலைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. எந்த தடயங்களும் இல்லாமல் நடைபெறும் இந்த கொலைகள் போலீசாரை திணறடிக்க, அந்த ஊருக்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் பாரி விசாரணையை தொடங்குகிறார். இறுதியில் கொலையாளி யார்? அந்த மர்மத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் முக்கியக் கதைக்களமாகும்.

இப்படத்தை இயக்கியுள்ள பாலாஜி கூறுகையில், “தமிழ் ரசிகர்கள் எப்போதும் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படங்களை வரவேற்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பரபரப்பும் மர்மமும் நிறைந்த இந்தப் படம் ரசிகர்களை கடைசி வரை இருக்கையில் கட்டிப்போடும்” என்றார்.

‘ராஜா ராணி’ தொடர் மூலம் பிரபலமான சித்து சித் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதுவரை நகைச்சுவை வேடங்களில் அதிகம் காணப்பட்ட சாப்ளின் பாலு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவை மணிகண்டன் பிகே மேற்கொண்டுள்ள நிலையில், ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ‘ஜாக்கி’ திரைப்படப் புகழ் சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.

வண்டிப்பெரியார், அச்சன்கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஜூன் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சமீப காலமாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் மலையாள க்ரைம் த்ரில்லர் படங்களின் தரத்தில், தமிழில் உருவாகியுள்ள இந்த ‘தி டார்க் ஹெவன்’, மர்மம் மற்றும் பரபரப்பை விரும்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'The Dark Heaven' Release Date Announced!Aroul D ShankarJayakumar JanakiramanNizhalgal RaviRiythvikaSidhu SidTharshikaThe Dark HeavenVela Rama Moorthy