அதிர்ஷ்டக்கார மருமகன் ரோபோ சங்கரால், ரமேஷ் கண்ணா முதலமைச்சர் ரேஞ்சிற்கு உயர்ந்து விட்டாரா? என்கிற ‘அம்பி’ படத்தின் காமெடி சரவெடி பற்றிப் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மற்றும் மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் ‘ரோல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் பாஸர் ஜே எல்வின்.
இவர், தற்போது ‘ரோபோ’ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அம்பி’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு, வரும் மே மாதம் ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தில் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, நமோ நாராயணா, கஞ்சா கருப்பு, மோகன் வைத்யா உள்பட பல காமெடி பட்டாளங்கள் அசத்தியுள்ளனர்.
இந்நிலையில், இப்படம் தொடர்பான புரொமோஷன் பணியிலிருந்த இயக்குனர் எல்வின் தெரிவிக்கையில்,
‘மூன்று அக்கா தங்கைகளோடு பிறந்த ஒரு அப்பாவி பையன் தான் ‘அம்பி’. அப்பாவும் இல்லாத நிலையில் குடும்ப கஷ்டம் சூழ்கிறது. இதனால், வெளிநாடு போய் சகோதரிகளுக்கு கல்யாணம் செய்து வைத்து செட்டிலாகும்போது, இவனுக்கு வயது நாற்பதை கடந்து விடுகிறது.
இச்சூழலில், சகோதரிகள் மூன்று பேரும் அம்பிக்கு திருமணம் செய்து வைத்தார்களா? என்கிற சுவாரஸ்ய சம்பவங்களாக விவரிக்கிறது இப்படம். ஆனால், இதனை புதிய பரிமாணத்தில் திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறேன். படத்தில் ஆபாசம், டபுள் மீனிங் டயலாக் இல்லாமல் அனைவரும் ரசிக்கிற பேமிலி என்டர்டெய்னர் மூவியாக உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும், இப்படத்தில் நடித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்து இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா தெரிவிக்கையில்,
‘படத்தில் ரோபோ சங்கர் ஹீரோவாக நான் அரசியல்வாதியாக பண்ணிருக்கோம். ரோபோ சங்கர் எது சொன்னாலும் நடக்கும். அது வித்தியாசமான காமெடியா இருக்கும். அவர் சாதாரணமா செய்ற காரியமெல்லாம் கூட பவர்ஃபுல்லா தெரியும். அதனால, அவரை நான் மருமகனா ஏத்துக்கிறதுக்கு ட்ரை பண்ணுவேன்.
அவர் வந்தவுடனே, என் லெவல் மினிஸ்டர் சிஎம்னு பெரிய லெவலுக்கு போயிட்டு இருக்கும். அதனால ரொம்ப அதிர்ஷ்டமான மாப்பிள்ளைனு வச்சிட்டு இருப்பேன். அதுல நடக்கிற காமெடிகள் தான்; ஆனா, உண்மை அது கிடையாது. இயற்கையாவே நடக்கிறது அப்படி தெரியும். ரொம்ப இன்வால்வ்மென்டா பண்ணிருக்கேன். எல்லாரும் ரசிச்சு சிரிக்கிற மாதிரி எடுத்திருக்கிறார் எல்வின்’ என மாறாத புன்னகையுடன் தெரிவித்தார் ரமேஷ் கண்ணா.
முன்னதாக, கமல்ஹாசன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பாடலையும் வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக, குடும்பத்துடன் பார்த்துச் சிரித்து மகிழ ‘அம்பி’ வருகிறான் மே மாதம்.. ஆனந்தமாய் பார்ப்போமே.!