சினிமாவை கொல்லாதீர்கள்: பவன் கல்யாண் பேச்சு..

‘ஓஜி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண்.

மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண்.

மேலும், அவர் பேசும்போது, ‘ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பலர் தங்களது குடும்பங்களை விட்டுப் பிரிந்து பணிபுரிந்து வருகிறார்கள். இயக்குநர் சுஜித் தனது மனைவியையும் குழந்தையையும் ஒன்றரை மாதமாகப் பார்க்கவில்லை.

ஆனால், அனைவரும் படும் கஷ்டங்களை அறியாமல் ரசிகர்கள் இணையத்தில் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை நிறுத்துமாறும் எனது ரசிகர்களையும், மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

திரைப்படங்கள் ஓடி 100 நாட்கள் கொண்டாடிய நாட்கள் எல்லாம் இருந்தன. ஆனால், இப்போது ஒரு படத்தின் ஆயுட்காலம் 6 நாட்கள் மட்டுமே. ஆகையால் தயவுசெய்து சினிமாவை கொல்லாதீர்கள். ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள்’ என்று பேசினார். இந்தப் பேச்சு இணையத்தில் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓஜி’. இதன் ஒளிப்பதிவாளராக ரவி.கே சந்திரன், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதனை டிவிவி நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இப்படம் ரூ.300 கோடியைத் தாண்டி வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

actor ap deputy cm pawan kalyan request to fans
actor pawan kalyanog moviestoryபவன் கல்யாண்ரசிகர்கள்