‘எனது வாழ்நாள் லட்சியத்தை இந்த வருடம் தொடங்குகிறேன்’ என கூறியுள்ளார் அமீர்கான். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.
‘மகாபாரதம்’ இதிகாச கதையினை படமாக்குவது என்பது மெகா சாதனைதான். அனைத்தும் நிறைவாக பொருந்தி அமையவேண்டும். இல்லையெனில், டிவி சீரியல்போல தோன்றி விடும்.
அவ்வகையில், இந்தியாவில் இதற்கான முயற்சிகளில் பிரபல இயக்குனர்கள் பலர் முயற்சித்தனர். பட்ஜெட் மற்றும் ஆர்டிஸ்ட் இன்னபிற காரணங்களால் பேச்சுவார்த்தையுடன் நின்று போனது.
இந்நிலையில், அமீர்கானின் தற்போதைய மணவாழ்க்கை சர்ச்சையானது தெரிந்ததே. இச்சூழலில் திரைத்துறையில் தேர்ந்த திறமையாளரான அவர், ‘மகாபாரதம்’ கதையை படமாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
‘எனது வாழ்நாள் குறிக்கோள் என்னவென்றால் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்குவது தான்.
அதற்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்க இருக்கிறேன்.
‘மகாபாரதம்’ குறித்து எனக்கு இருக்கும் ஒரே லட்சியம், இந்த வருடமே ‘மகாபாரதம்’ படத்தின் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். அதன் படப்பிடிப்பு தொடங்க சில காலம் ஆகும். ஏனென்றால், முதலில் படத்தினை எழுதி முடிக்கவே சில மாதங்கள் ஆகும்.
பெரிய கதை என்பதால், பல பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். ஒவ்வொரு பாகத்துக்கும் யார் பொருத்தமான நடிகர் என்பதை வைத்து தான் நடிகர்கள் தேர்வு இருக்கும். நான் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
ஆனால், ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாணியில் ஒவ்வொரு பாகத்துக்கு ஒவ்வொரு இயக்குநர் என்று இருந்தால் மட்டுமே சீக்கிரமாக படமாக்க முடியும். இல்லையென்றால், ஒரு பாகத்தை முடித்துவிட்டு தான் அடுத்த பாகம் தொடங்க முடியும். இப்போதைக்கு நானே படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.