ஹெச் வினோத் உதவி இயக்குநர் படத்தில் ஆகாஷ் முரளி!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு திரைப்படம் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது. தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்ததுடன், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

குறிப்பாக, தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்த அமைச்சர் ராஜ் மோகன், தற்போது அமைச்சராக அதே நிறுவனத்தின் புதிய படத்தை துவக்கி வைத்தது நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியது.

இந்நிகழ்வில் முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் ஹெச். வினோத்தின் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் தனித்த இயக்குநராக தனது பயணத்தை தொடங்குகிறார்.

1970-களின் தொடக்ககால சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்ட ஒரு விறுவிறுப்பான கதையாக அமைகிறது. நேர்மை, கனவு, லட்சியம் மற்றும் வெற்றியை நோக்கி போராடும் ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுப்பூர்வமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லும் படைப்பாக இது உருவாகவுள்ளது.

அந்தக் காலகட்டத்தின் சென்னை நகர வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் கொண்டு வருவதற்காக படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மாறுபட்ட கதைக்களங்களையும், வணிகரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ், இந்தப் படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Akash MuraliDirector HarshavarthanH. Vinoth actor Ravi MohanRaj Mohanஆகாஷ் முரளிஹெச்.வினோத்