நிறைய நடிகர்கள் இப்படியொரு கதாபாத்திரத்தை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா ஆதங்கம்..
‘பிளடி பெக்கர்’ என்ற படத்தை தொடர்ந்து ‘மாஸ்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திம் ஏற்றுள்ளார். இப்படம், வருகிற 21-ந்தேதி வெளியாகிறது. தற்போது, இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் அனைத்து பணிகளுமே இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்றுள்ளது. இப்படத்துக்காக படக்குழுவினர் அனைவரும் இணைந்து பேட்டியொன்று அளித்துள்ளனர். அதில் ‘வடசென்னை’ படத்தின் ‘சந்திரா’ கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா. அப்பேட்டியில்,
‘வடசென்னை’ படத்தின் சந்திரா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு எந்தவொரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால், நிறைய பாராட்டுகள் கிடைத்தது, வேலை கிடைக்கவில்லை.
இங்கு துரதிர்ஷ்டவசமாக நிறைய நடிகர்கள் தங்களது படங்களில் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை. இதை நான் தமிழ் சினிமாவில் கவனிப்பது மட்டுமன்றி, என் திரையுலக வாழ்விலும் கவனிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.
வடசென்னை படத்திற்கு முன்னதாக, ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியா மாறுபட்ட கதாபாத்திரத்தில் வந்து பாராட்டு பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

