காலை முதல் இரவு வரை நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை..
ஸ்ரீகாந்த்-ஷாம் ஆகியோர் இணைந்து நடித்த ‘தி டிரெய்னர்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், கிருஷ்ணா அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். ஸ்ரீகாந்தை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் 2-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தனர்.
அந்த சம்மனை ஏற்று ஸ்ரீகாந்த் நேற்று நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அவர் முக கவசம் அணிந்தபடி வந்திருந்தார். அவரிடம் தொடர்ந்து இரவுவரை விசாரணை நடந்தது.
மதிய உணவைக்கூட அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே சாப்பிட்டார். போதைப்பொருளை மற்ற நடிகர்களுக்கும் அவர் சப்ளை செய்தாரா? என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

