நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு ஏற்படுமா?
தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஜெயம் ரவி. தற்போது நீதிமன்றத்தில் உள்ள இவரது விவாகரத்து வழக்கு குறித்த தகவல்கள் காண்போம்..
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ படத்தை அடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, போன்ற படங்கள் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், ஜெயம் ரவி வில்லனாக புதிய பரிமாணத்துடன் வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு இவர் நடித்த சைரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், பிரதர் திரைப்படம் தீபாவளி ரேசில் இணைந்ததால், அமரன் படத்தின் முன்பு ஜொலிக்க முடியாமல் போனது.
இவருடைய திரையுலக வாழ்க்கை ஒருபுறம் பிசியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையில் குடும்ப நலன் கருதி இந்த முடிவை எடுப்பதாக ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு பின்னர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், இது முழுக்க முழுக்க ஜெயம் ரவி சுயமாக எடுத்த முடிவு என்றும், இது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்பது போல் கூறியிருந்தார். அதேபோல் இந்த அறிகையால் தானும் தன்னுடைய பிள்ளைகளும் செய்வது அறியாமல் தவித்து வருவதாகவும் ஆர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஜெயம் ரவி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், ஆர்த்தி மீண்டும் தன்னுடைய கணவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ்வதில் விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார். நீதிமன்றம் தனக்கான நியாயத்தை தெரிவிக்கும் என்கிற நம்பிக்கையும் இவருடைய அறிக்கையில் வெளிப்பட்டது.
இந்நிலையில், ஜெயம் ரவி தரப்பில் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 15ஆம் தேதி ஜெயம் ரவி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். ஆனால் ஆர்த்தி உடல்நல பிரச்சனை காரணமாக தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று கூறி, காணொளி காட்சி மூலம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சமரச தீர்வு மையத்தில், இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் வழக்கு நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இருவரும் சமரச தீவு மையத்தில் நேற்று ஆஜராகி சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருவருக்கும் இடையே எவ்வித சமரசமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அடுத்த மாதம் 7-ஆம் தேதிக்கு இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், இருமனமும் ‘ஒருமனமாய் இணையட்டும்’ என ரசிகர்கள் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.