விஜய் சேதுபதி-திரிஷா மீண்டும் இணையும் ’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் அப்டேட்..
பள்ளிப்பருவத்தில் காதல் பூப்பது இயல்பான நிகழ்வுதான். அதனை மிக அழகாக திரையில் வாழ்ந்த படைப்பு தான் 96 திரைப்படம்.
20 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் சந்திக்கும் அந்த பள்ளிப் பருவ மாணவ-மாணவியர்களின் உணர்வியலை 96 படம், கவிதையாக சொல்லியது என்றால் மிகையல்ல. தற்போது இதன் 2-ம் பாகம் குறித்துப் பார்ப்போம்.!
விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக உருவாகி வந்தது 96 திரைப்படம். இப்படத்தின் வெற்றி நடிகர் விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி, நடிகை திரிஷாவுக்கும் அவரது திரைப் பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
96 படம் தமிழில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதை தொடர்ந்து அப்படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்தனர். ஆனால், தமிழில் கிடைத்த வெற்றி மற்ற மொழிகளில் இப்படத்திற்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார் ‘மெய்யழகன்’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த அப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, 96 படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்குகிறார். படத்திமன் ஸ்கிரிப்ட் பணிகளும் முடிந்து, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதியும் நடிகை திரிஷாவும் மீண்டும் ஜோடி சேர உள்ளனர். கோவிந்த் வஸந்தா இசையமைக்க உள்ளார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இரண்டாம் பாகத்தில், காதலர்கள் இணைய வாய்ப்பில்லை என தெரிகிறது. அவ்வகையில் நிகழும் காதல் காட்சிகள் எப்படியிருக்கும் என ஆவலாய் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியோ, கண்ணியமிக்க காதல் படம், விரைவில் தொடங்கி, வெற்றிக்கொடி நாட்டட்டும்.!