இளையராஜா இசையில் உருவாகும் புதிய படம்… முதல் காட்சியைப் படமாக்கிய பாலா!

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ மற்றும் அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம், தனது அடுத்த திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. கணேஷ் ரகு தயாரிப்பில், இயக்குநர் அமீரின் உதவி இயக்குநரான இராம்.நா இப்படத்தை இயக்குகிறார்.
அமெரிக்காவில் வசித்து வரும் தயாரிப்பாளர் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ திரைப்படத்தைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்தார். இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அமீரை, சூர்யா மற்றும் திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் சேரன் கிளாப் அடிக்க, நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் கேமராவை இயக்கி வைத்தார். இயக்குநர் அமீர் கிளாப் அடிக்க, இயக்குநர் பாலா ஆக்ஷன் சொல்ல, முதல் காட்சியை பாலா படமாக்கினார்.
இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமதி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் இயக்குநர் கரு. பழனியப்பன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இந்தப் புதிய படத்திற்கு முதன்முறையாக இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நெகிழ்ச்சியான கதைக்களம் மற்றும் ஊக்கமளிக்கும் திரைக்கதையுடன் இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். பரதன் வசனம் எழுதுகிறார். பாலுமகேந்திரா கலை இயக்கத்தைக் கவனிக்க, பூபதி வேதகிரி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மீரா ஆடை வடிவமைப்பையும், பாலு ஸ்டில்ஸ் புகைப்படப் பணிகளையும், பழநி அமாவாசை உடை வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். ஒலிக்கலவையை ஹரிஷ் மேற்கொள்கிறார். நிகில் முருகன் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்க, கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை விஜயகுமார் R.S. மற்றும் காசி வர்மன் கவனிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கவுள்ள முன்னணி நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வரும் அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம், இந்தப் புதிய திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
