முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை!

எழுத்தாளர் மற்றும் இயக்குநராக தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் சீனு ராமசாமி, தனது புதிய நூலான ‘சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)’ குறித்து பேசியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற போதிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஆழமாக இணைந்துள்ள சினிமாவை சரியாகப் புரிந்துகொள்ளும் கல்வி இல்லாதது குறையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் செல்போன்கள் மற்றும் காட்சி ஊடகங்களுடன் வளர்ந்து வருவதால், நல்ல திரைப்படங்களை அடையாளம் கண்டு ரசிக்கும் திறனை சிறுவயதிலேயே வளர்க்க வேண்டியது அவசியம் என்றும், அதற்காக ‘சினிமா ரசனைக் கல்வி’ பள்ளிக் கல்வியின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனது நூல் குழந்தைகளுக்கான புத்தகம் அல்ல; மாறாக, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், சினிமா மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் திரைப்பட ரசனையை வளர்க்க விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும், ஆரம்ப வகுப்புகள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, தனி ஆய்வகங்களைப் போல சிறிய ஹோம் தியேட்டர் வசதிகளை அமைத்து, மாணவர்களுக்கு தரமான திரைப்படங்களை திரையிட்டு அவர்களின் சிந்தனை, ரசனை மற்றும் புரிதலை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, ‘சினிமா ரசனைக் கல்வி’ திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி, சினிமாவை ஒரு கல்வி கருவியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
