மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசைவிழா: தமிழக ரசிகர்களுக்கு ஏற்பாடு?
விஜய் நடிப்பில் கடைசிப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலானது. ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியான இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.
பொதுவாக, விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் நடைபெறும் நிலையில், ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச்சை மலேசியாவில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவ்வகையில், இசை வெளியீட்டு விழாவை ‘கான்சார்ட்’ போல நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மலேசியாவில் பிரம்மாண்ட அரங்கில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் நடைபெறவுள்ள நிலையில், வெறும் இசை வெளியீட்டு விழாவாக இல்லாமல், கான்சார்ட் போன்ற ஸ்டைலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் விஜய் பாடல்களை பாட, அதனைத் தொடர்ந்து, ஆடியோ லான்ச் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க பாஸ்கள் விற்கப்பட உள்ளதாகவும், அத்துடன் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்தும் விஜய் ரசிகர்கள் கலந்துகொள்ளும் விதமாக ஏற்பாடுகள் நடந்து வருதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

