விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் பொங்கல் ரிலீஸ் உறுதி

Web Ads

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம், வரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் திரைமொழியால் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, இந்தப் படத்திலும் தனது வித்தியாசமான பாணியைத் தொடர்ந்துள்ளார். அதேசமயம், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் சார்பில் தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

ஐந்து பாடல்கள், சுவாரஸ்யமான கதைக்களம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் எனப் பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்கள் கதையுடன் எளிதில் ஒன்றிப்போகும் வகையில் படம் இருக்கும் என படக்குழு கூறியுள்ளது.

Web Ad 2

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் தியாகராஜா குமாரராஜா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். வழக்கமாக தனது படங்களின் படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும் இயக்குநர், இப்படத்தின் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி குறுகிய காலத்திலேயே நிறைவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், ராஜ் பி. ஷெட்டி முதல் முறையாக தமிழில் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் – நடிகர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதும், பொங்கல் வெளியீடாக படம் திரைக்கு வருவதும் ‘பாக்கெட் நாவல்’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.