விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டிரெய்லர் வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இரு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீரத்தைப் பற்றி பேசுவதுடன் டிரெய்லர் தொடங்குகிறது. யாராலும் அசைக்க முடியாதவர் என பத்தாவின் பெருமையை பலரும் பேச, அதற்கேற்ப அடுத்தடுத்து இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் அவரது கதாபாத்திரத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
தொடர்ந்து, பத்தாவின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெறுகின்றன. ரௌடியாக அறிமுகமாகும் பத்தாவின் மற்றொரு பக்கமாக அவரது குடும்பஸ்தன் முகத்தையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது.
ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டிரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் வேறு ஒரு பரிமாணத்திற்கு நகர்கிறது. பத்தாவைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், அவரது வெவ்வேறு முகங்கள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களின் உறவுகள் என பல சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெறும் ‘செல்லமே மகளே’ பாடல் காட்சிகள் படத்தின் உணர்வுப்பூர்வமான அம்சத்தை வெளிப்படுத்துகின்றன. “அப்பா வந்திருவார்ல அம்மா?” என சிறுமி கேட்கும் காட்சியுடன், சிறையில் இருக்கும் பத்தாவின் காட்சி இடம்பெற்று டிரெய்லர் நிறைவடைகிறது. இதன் மூலம் பத்தாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
80-களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், அந்தக் காலகட்டத்தின் தோற்றம், கதாபாத்திரங்களின் உடைகள், காட்சியமைப்பு மற்றும் சூழல் ஆகியவை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பத்தா உண்மையில் யார், அவரது பல்வேறு முகங்களுக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன, ரௌடி பத்தா எப்படி குடும்பஸ்தனாக மாறுகிறார், அவர் ஏன் சிறையில் இருக்கிறார் என்பன போன்ற பல கேள்விகளையும் டிரெய்லர் எழுப்புகிறது.
ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மர்மம் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’ டிரெய்லர், கதையின் முக்கிய முடிச்சுகளை வெளிப்படுத்தாமல் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்கள், 80-களின் பின்னணி, நகைச்சுவை காட்சிகள் மற்றும் குடும்ப உணர்வுகள் என பல சுவாரஸ்ய அம்சங்களை கொண்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு என்ன மாதிரியான அனுபவத்தை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை டிரெய்லர் ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார்.
அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.