‘காதல்’ பற்றி கருத்து சொன்ன வெற்றிமாறனுக்கு, ரசிகர்கள் கோரிக்கை..
‘ரசிகர்கள் எதிர்பார்ப்பு’ குறித்து பேசிய வெற்றிமாறனுக்கு, இணையவாசிகள் தெரிவித்துள்ள கருத்து காண்போம்..
தமிழ் சினிமாவில், நாவல்கள் மற்றும் சிறுகதைகளை திரைக்கதையாக வடிவமைக்கும் இயக்குனர் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் பாலுமகேந்திரா தான். அவ்வகையில், அவரிடம் உதவி இயக்குனராக பயின்றவர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
இந்நிலையில், சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை அதே பெயரிலேயே, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் படமாக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி விட்டன. இதனையடுத்து, படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் மிக ஆவலாய் உள்ளனர்.
சமூகம் சார்ந்த படங்களை வெற்றிமாறன் இயக்கினாலும், அதில் இடம்பெறும் காதல் காட்சிகள் அனைத்துமே அருமையானவை. எனவே, அவர் ஏன் முழு நீள காதல் படத்தை எடுக்காமல் இருக்கிறார்? என்ற கேள்வி திரை ஆர்வலர்களிடையே எழுகிறது.
இந்நிலையில், அதுகுறித்து பேசிய வெற்றிமாறன், ‘ஒரு படத்தின் பணிகளை முடிக்க எத்தனை நாட்களாகும் என்பதை இயக்குனர்தான் தீர்மானிக்க முடியும். அவரைத் தவிர்த்து யாரும் தீர்மானிக்கவும் முடியாது, தீர்மானிக்கவும் கூடாது.
சமீபத்தில் ஒரு பெண் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வந்தார். அவரைப் பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன்பு என்னைப் பார்த்த மாதிரியே இருந்தது. இப்போது சினிமா துறையில் பெண்கள் அதிகரிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு, காதல் படங்கள்தான் ரொம்பவே பிடிக்கும். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருக்கிறது. எனவேதான், இன்னமும் காதல் படங்கள் இயக்கவில்லை’ என்றார்.
இது குறித்து இணையவாசிகள், ரசிகர்கள் எதிர்பார்ப்பு ‘வேறு மாதிரி’ என்றால் என்ன சார்? மனித உணர்வுகள் என்றுமே மாறுவதில்லை. ஆதலால், மகத்தான காதலை வெள்ளித்திரையில் தங்கமாய் வார்த்திடுங்கள்’ என உணர்வபூர்வமாய் உருகி வருகின்றனர்.
