ருத்ரா, பிரீத்தி அஸ்ராணி நடித்த ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ படத்தின் டீசர் வெளியீடு

AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ருத்ரா மற்றும் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை, குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள விக்கி பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ளார்.
இன்றைய Gen Z தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஃபீல்-குட் கமர்ஷியல் எண்டர்டெய்னர், நவீன காதல் உறவுகளால் ஒரு அப்பாவி இளைஞன் சந்திக்கும் சிக்கல்களை நகைச்சுவை கலந்த முறையில் பதிவு செய்கிறது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர், இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையான கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளதால் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ருத்ரா, ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோருடன் ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
AP இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
சென்னை மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு:
* இயக்கம்: விக்கி பாஸ்கர்
* ஒளிப்பதிவு: லூக் ஜோஸ்
* இசை: பரத் சங்கர்
* எடிட்டிங்: நாஷ்
* கலை இயக்கம்: வீரமணி கணேசன்
* உடை வடிவமைப்பு: நவா ராஜ்குமார்
* பப்ளிசிட்டி டிசைன்: வியாகி
* CG: Srivfx
* மக்கள் தொடர்பு: AIM சதீஷ்.