SC grants bail to Chidambaram
SC grants bail to Chidambaram

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. மேலும் இன்று பிற்பகல் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வர இருக்கிறார்.

ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது புகார் உள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

மேலும் சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்., இருப்பினும் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை விசாரணை செய்ததில், வழக்கு மிகவும் வலுவாக இருப்பதால் ப. சிதம்பரத்திற்கு எந்த விதமான ஜாமீனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் நிறைய உடல் பாதிப்புகளும், கடந்த ஒரு மாதமாக தீராத வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து வந்தது.

இந்நிலையில் கடைசியாக நவம்பர் 14ம் தேதி இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் தனது தீர்ப்பை வழங்கினார். இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. டெல்லி ஹைகோர்ட் நீதிபதியின் தீர்ப்பில் இருக்கும் தவறையும் தன்னுடைய உடல் நலத்தையும் சுட்டி காட்டி ப.சிதம்பரம் ஜாமீன் கோரினார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிமன்றத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு இன்று பிற்பகல் திகார் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சிதம்பரம். இதனை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.