நடிகர் யோகி பாபுவின் 300வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் கடினமாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறான். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த வாகனம் திருடுபோகிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க அவன் முயற்சிக்கும்போது, அந்த வாகனத்திற்குப் பலரும் உரிமை கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் செயல்படும் வாகனத் திருட்டு மாஃபியா கும்பலை மையமாகக் கொண்டு, நகைச்சுவையும் உணர்ச்சிகளும் கலந்த கமர்ஷியல் படமாக ‘அர்ஜுனன் பேர் பத்து’ உருவாகியுள்ளது.
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் யோகி பாபுவுக்கு ஜோடியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார்.
மேலும், காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சௌந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லெனின் பாரதியும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘தண்டகாரண்யம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார். ‘அமரன்’ படத்தின் கலை இயக்குநர் பி. சேகர் கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர். கே. நட்ராஜ் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் 27ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யோகி பாபுவின் 300வது திரைப்படம், புதுமையான கதைக்களம், நகைச்சுவை எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’, நவம்பர் 27ஆம் தேதி ரசிகர்களைத் திரையரங்குகளில் சந்திக்கத் தயாராகி வருகிறது.
