போலீஸ், விசாரணை என வழக்கமான கதை இல்லை… ‘தி டார்க் ஹெவன்’ குறித்து ரித்விகா!

Web Ads

நாட்டார் கதையை மையமாகக் கொண்டு முழுநீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை ‘D3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியுள்ளார்.

பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு லாவர்தன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன.

கொலை மற்றும் அதனைச் சுற்றிய துப்பறியும் விசாரணையை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு, திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், முக்கூடல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை அதிகம் படமாக்கப்படாத இடங்களைத் தேடிக் கண்டறிந்து நடத்தப்பட்டுள்ளது.

இப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் பேசிய இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, ‘தி டார்க் ஹெவன்’ தனக்கு முதல் க்ரைம் த்ரில்லர் படம் என்றும், இயக்குநர் பாலாஜி கூறிய ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இப்படம் பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, மலை மற்றும் காட்டுப் பகுதிகளில் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்றதாகக் கூறினார். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்குக்கூட படப்பிடிப்புக் கருவிகளை சுமந்து சென்று காட்சிகளைப் படமாக்கியதாக அவர் தெரிவித்தார்.

நடிகை தர்ஷிகா, ‘தி டார்க் ஹெவன்’ தனது முதல் படம் என்றும், த்ரில்லர் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் பார்த்து தங்களது நேர்மையான விமர்சனங்களைத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Web Ad 2

நடிகை ரித்விகா பேசுகையில், வழக்கமான போலீஸ், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் போன்ற ஒரே மாதிரியான த்ரில்லர் படங்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்தார். படக்குழுவினர் சவாலான இடங்களில் கடுமையாக உழைத்துள்ளதாகவும், இப்படம் திரையரங்கில் திருப்தியான அனுபவத்தை வழங்கும் என்றும் கூறினார்.

இயக்குநர் பாலாஜி, படத்தை பாதிக்கு மேல் முடித்த நிலையில் மீண்டும் தொடங்கி முழுமைப்படுத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவித்தார். சித்து, கோபால், சரண் உள்ளிட்டோர் வழங்கிய ஆதரவு இல்லாமல் இப்படத்தை முடித்திருக்க முடியாது என்றும் நன்றி தெரிவித்தார்.

மேலும், இப்படம் நாட்டார் கதையை மையமாகக் கொண்ட த்ரில்லர் என்றும், பாரி, உமையாள், கனி உள்ளிட்ட நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்தார். குறிப்பாக ரித்விகா ஏற்றுள்ள கதாபாத்திரம் படம் வெளியான பிறகு பேசப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கதை நாயகன் சித்து பேசுகையில், ‘தி டார்க் ஹெவன்’ தனக்கு கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் என்றும், அதிலும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். த்ரில்லர் கதையில் காவல்துறை வேடம் கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்றும், இயக்குநர் பாலாஜி மீது மிகுந்த நம்பிக்கை இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், படக்குழுவினர் காடு, மலை என சிரமமான இடங்களில் கடுமையாக உழைத்து படப்பிடிப்பை மேற்கொண்டதாகவும், அனுபவமிக்க நடிகர்களான வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் சித்து கூறினார்.

‘தி டார்க் ஹெவன்’ செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.