பகத்பாசிலை பார்ப்பது, எனக்கு விருந்து மாதிரி: நடிகை ருஹானி சர்மா பதிவு
பகத்பாசில் நடிப்பு குறித்து, நடிகை ருஹானி சிலாகித்துள்ள கருத்து பற்றி காண்போம்..
இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் பகத் பாசில். தனித்துவமான நடிப்பில் அனைவரையும் கவர்பவர். ஆனால், புஷ்பா-2 படத்தில் அவருக்கான ஸ்கோப் முழுமையாக இல்லை. இருப்பினும் குறுகிய நேர நடிப்பில் மிரட்டியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு ஸ்கோப் இல்லாத புஷ்பா-2 படத்தில் எப்படி பகத் பாசில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து, பகத் பாசில் வெளிப்படையாக பேசுகையில்,
‘புஷ்பா-2 திரைப்படத்தால் எனக்கு எந்த பயனும் கிடைக்காது, எந்த மேஜிக்க்கும் நடக்காது என எனக்குத் தெரியும். ஆனால், சுகுமாரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதாலும், இதுபோல ஒரு டீமுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே, இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்றார்.
இச்சூழலில், தெலுங்கு நடிகை ருஹானி சர்மா புஷ்பா-2 படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்றிருக்கிறார். அப்போது, பகத் பாசிலை அடையாளம் காண முடியாமல், தன் சகோதரரிடம் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி உள்ளது. அந்த பதிவில்,
‘நான் பகத் பாசிலின் தீவிர ரசிகை. புஷ்பா-2 படத்தில் அவரது வருகைக்காக மிகவும் ஆர்வமாக காத்திருந்தேன். அதுவும் இறுதியில் நடந்தது. ஆனால், அவரை உடனடியாக என்னால் அடையாளம் காண முடியவில்லை.
என் சகோதரரிடம் இவர்தான் பகத் பாசிலா? என்று கேட்டுதான் தெரிந்து கொண்டேன். இதுதான் அவரிடம் உள்ள மேஜிக். அந்த அளவிற்கு பகத் பாசில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை வித்தியாசமாக உருமாற்றம் செய்து கொள்கிறார். அவரை திரையரங்கில் பார்ப்பது எப்போதுமே ஒரு விருந்துதான்’ என பகத்தின் தீவிர பக்தையாக சிலாகித்திருக்கிறார்.
அப்புறமென்ன, புஷ்பா-3 படத்தில் ருஹானிக்கான வாய்ப்பு கனிந்து வருகிறது எனலாம்?