என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை.. நடிகை கீர்த்தி சுரேஷ்!

Web Ads

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘அக்கா’ தொடரில், நடிகை கீர்த்தி சுரேஷ் ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் ஆளப்பட்டு வரும் ஓர் அரசாட்சியின் பின்னணியில், அதிகாரம், பாரம்பரியம் மற்றும் விசுவாசத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது.

பெர்னூரு என்ற பகுதியில், தங்களது பாரம்பரியத்தையும் அதிகாரத்தையும் பாதுகாத்து வரும் ஆட்சிக்கு ஒரு போட்டி பெரும் சவாலாக உருவாகிறது. தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், நம்பிக்கைகளைக் காப்பாற்றவும் பவானி பல்வேறு சோதனைகளையும் கடினமான முடிவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

‘மகாநதி’, ‘சாணி காயிதம்’, ‘தசரா’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், இந்தத் தொடரில் இதுவரை முயற்சி செய்யாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று முன்பு தான் நம்பியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய கீர்த்தி சுரேஷ், “பவானி தனது பக்கம் இருக்கும் நியாயம் என்ன என்பதைத் தெளிவாக அறிந்த பெண். தனது பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாப்பதற்காக அவள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பாள். அவளிடம் இருக்கும் வலிமை, அதிகாரம் மற்றும் அவள் எடுக்கும் கடினமான முடிவுகள் சுவாரஸ்யமானவை” என்று கூறியுள்ளார்.

Web Ad 2

இதற்கிடையில், நடிகை ராதிகா ஆப்தே ஏற்றுள்ள ருத்ரா கதாபாத்திரம், பவானியின் அதிகாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. இருவரின் லட்சியங்களும் நம்பிக்கைகளும் மோதுவதால், அதிகாரப் போட்டி தீவிரமடைகிறது. விசுவாசங்கள் சோதிக்கப்படும் இந்தப் போராட்டம், பெர்னூருவின் எதிர்காலத்தையே மாற்றக்கூடியதாக அமைகிறது.

தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இத்தொடரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோருடன் தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர் மற்றும் மோனிகா பன்வார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.