வீராங்கனை கார்த்திகாவுக்கு ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து: பா.ரஞ்சித் தமிழக அரசுக்கு கோரிக்கை..

சென்னையின் கண்ணகி நகர் கார்த்திகா தங்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து வருகின்றனர். இது குறித்த தகவல்கள் காண்போம்..
3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைன் நாட்டில் நடந்து வருகிறது. இதில், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் ஈரானை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்தேன். இன்று உலகமும் வியக்கிறது. அன்புத் தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்’ என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பா,ரஞ்சித், கார்த்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.
கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும். மேலும், கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
