ஃபஹத் பாசில் அந்த கேரக்டராகவே மாறிடுவார்! – நடிகர் சூர்யா

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படக்குழுவினர் பேச்சு – சூர்யா, ராஜமௌலி, ஃபஹத் பாசில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!
எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதன் சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன், ஹாலிவுட்டின் பிரம்மாண்டத்திற்கு மாற்றாக ‘ஈ’ போன்ற கதாபாத்திரத்தை வைத்து உலக அளவில் கவனம் ஈர்த்தவர் எஸ்.எஸ். ராஜமௌலி என பாராட்டினார். இந்தப் படம் குடும்ப ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, இது தங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம் என்றும், எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் படமாக இருந்தாலும், கதையின் உணர்வுகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் கூறினார். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி, தயாரிப்பாளர் கார்த்திகேயா மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலியின் பணியில் காணப்படும் துல்லியத்தைப் பாராட்டினார். திரைக்கதையில் இருப்பதைவிட சிறப்பாக திரைமொழியில் படத்தை உருவாக்கியிருப்பதாகவும், ஃபஹத் பாசில் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாராவின் பங்களிப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி பேசுகையில், ‘ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை’ என்ற ஒற்றை வரிக் கதை தன்னை உடனடியாக கவர்ந்ததாக தெரிவித்தார். ஃபஹத் பாசிலின் நடிப்பையும் வெகுவாக பாராட்டிய அவர், படத்தின் முதல் பிரதியைப் பார்த்தபோது சிரித்தும் அழுதும் ரசித்ததாகக் கூறினார்.

மேலும், சூரி கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசிலும், திவ்யா கதாபாத்திரத்தில் சாராவும் சிறப்பாக நடித்துள்ளதாக ராஜமௌலி குறிப்பிட்டார். இருவருக்கும் இடையிலான போட்டி போன்ற நடிப்பு ரசிகர்களை கவரும் என்றும் அவர் கூறினார்.
நடிகர் ஃபஹத் பாசில், இந்தப் படத்தின் கதை மிகவும் புதிதாக இருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதித்ததாக தெரிவித்தார். சாராவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் பாராட்டிய அவர், இப்படம் ரசிகர்களை சிரிக்கவும் அழவும் வைக்கும் அழகான படமாக இருக்கும் என கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சூர்யா, ஃபஹத் பாசில்–ராஜமௌலி–கார்த்திகேயா கூட்டணியில் இப்படியொரு வித்தியாசமான திரைப்படம் உருவாகும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது என்றார்.
மேலும், ஃபஹத் பாசிலின் கதாபாத்திரத் தேர்வுகளை பாராட்டிய சூர்யா, அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதைவிட அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார் என குறிப்பிட்டார். குழந்தை நட்சத்திரம் சாராவையும் பாராட்டிய அவர், குழந்தைகளும் குடும்பத்தினரும் ரசிக்கக்கூடிய திரைப்படங்கள் அதிகம் உருவாக வேண்டும் என்றார்.
எஸ்.எஸ். ராஜமௌலி இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றதற்காக நன்றி தெரிவித்த சூர்யா, புதிய திறமைகள் மற்றும் புதிய கதைகளுக்கு அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவையும் பாராட்டினார். இறுதியில், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அக்டோபர் 2-ம் தேதி ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படத்தை திரையரங்குகளில் காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
