படம் பிடிக்கலைன்னா ரசிகர்கள் திட்டத்தான் செய்வார்கள்: இயக்குனர் அமீர்..
‘திரைப்படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ரசிகர்கள் கண்டிப்பாக விமர்சிக்கத்தான் செய்வார்கள்’ என இயக்குனர் அமீர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:
‘கங்குவா’ படத்தை வேண்டுமென்றே தோற்கடித்து விட்டார்கள் என சில பிரபலங்கள் கூறினர். முக்கியமாக, நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.
படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம், குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும். முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும், இது ஒரு முழுமையான சினிமா அனுபவம்.
தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு, இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.
படத்தின் 2-ம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால், முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது.
‘கங்குவா’ டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை” என குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவை அடுத்து பலரும் ஜோதிகாவையும் விமர்சித்தார்கள்.
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் ‘கங்குவா’ படம் பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அவர் இதுகுறித்து தெரிவிக்கையில், ‘சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தை ஏதோ ஒரு அணியினர் வேண்டுமென்றே தாக்கித்தான் தோல்வியடைந்தது போல் பேசினார்கள்.
அப்படி பார்த்தால் பக்கத்து மாநிலங்களில் ஏன் படம் ஓடவில்லை. ரசிகர்கள் விமர்சிக்கவே கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்?. ஒரு படைப்பு வெளியே வந்தால், அது நன்றாக இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக திட்டத்தான் செய்வார்கள்’ என்றார்.
முன்னதாக, ‘சூர்யா நடித்த ‘கஜினி’ படம் செம ஹிட்டானதற்கு காரணம் என்ன? என்பதையும் ஜோதிகா அன் கோ சிந்தித்துப் பார்க்கவேண்டும்’ என இணையவாசிகள் தெரிவிப்பதும் தற்போது வைரலாகி வருகிறது.