மகன் மரணத்திற்கு நீதி தேடும் தாய்: கோபி நயினாரின் அடுத்த படைப்பு ‘காலனி’!

Web Ads

‘அறம்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் கோபி நயினார், ‘மனுஷி’ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘காலனி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமூக அவலங்களை அழுத்தமாகப் பதிவு செய்யும் இவரது பாணியில், இப்படம் ஒரு தாயின் உணர்ச்சிப் போராட்டத்தைச் சொல்ல வருகிறது.

தன் மகனின் எதிர்பாராத மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடும் ஒரு தாயின் வலியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் வலிமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராதிகாவின் மகனாக அறிமுக நடிகர் லியோ நடித்துள்ளார்.

இப்படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத் சாகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இப்படத்திற்கு இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதிதி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காலனி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை (First Look) இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

யதார்த்தமான வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.