ஓ.டி.டி.யில் வெளியானது ‘கார்மேனி செல்வம்’

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
நிதி நெருக்கடியால் வாழ்க்கையில் போராடும் ஒரு ஓட்டுநர், தனது முதலாளியின் காரை ரகசியமாக டாக்ஸியாக இயக்கும் சூழ்நிலையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பணம், குடும்பம், மன அமைதி மற்றும் மனித உறவுகளின் மதிப்பை ஆழமாக பேசுகிறது.
திரையரங்குகளில் வெளியானபோது, மனிதர்களின் உணர்வுகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் இயல்பாக சித்தரித்திருப்பதற்காக படம் பாராட்டுகளைப் பெற்றது. பலரும் விருதுகளுக்குத் தகுதியான படைப்பாகவும் இதனை வர்ணித்தனர்.
இப்படம் குறித்து இயக்குநர் ராம் சக்ரி கூறுகையில், “இந்த திரைப்படம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அமேசான் பிரைம் வெளியீட்டின் மூலம் அது தற்போது சாத்தியமாகியுள்ளது” என்றார்.
யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு, ஜெகன் ஆர்.வி மற்றும் தினேஷ் எஸ் ஆகியோரின் படத்தொகுப்பு, மியூசிகிளவுட் ஸ்டுடியோ & டெக்னாலஜியின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
மனித உணர்வுகளையும் வாழ்க்கை யதார்த்தங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘கார்மேனி செல்வம்’, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு தரமான படைப்பாக அமேசான் பிரைம் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது.
