பூஜையுடன் துவங்கிய நடிகர் அஸ்வின் நடிக்கும் புதிய படமான “குட் நியூஸ்”

மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் ‘குட் நியூஸ்’ (GOOD NEWS) திரைப்படம், சென்னையில் பாரம்பரிய பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில், பாசம், நகைச்சுவை மற்றும் மனதை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.
படத்தின் துவக்க விழாவில் தமிழ் திரையுலகின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இயக்குநர் விஜய் முதல் காட்சிக்கான கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைக்க, இயக்குநர் பாலா கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மூவிட்ரான் புரொடக்ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய்பிரபு ஜெயக்குமார் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரமுருகன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியை இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் கொண்டு செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு சித்துகுமார் இசையமைக்க, பிரவீண்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கார்த்திக்வாசன் கலை இயக்குநராகவும், அர்ஜுன் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். எல். எம். தனசேகர் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், ரேகா செய்தித் தொடர்பாளராகவும் உள்ளனர்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரைவில் தொடங்கவுள்ளது.
தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார், “‘குட் நியூஸ்’ குடும்ப உறவுகள், பாசம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் உணர்வுகளை புதுமையான முறையில் சொல்லும் படம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படைப்பாக இது அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நாகேந்திரமுருகன் கூறுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து இயக்குநராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாண்டிராஜிடம் கற்ற அனுபவத்துடன், சிரிப்பு, உணர்வு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு குடும்பப் பொழுதுபோக்கு படத்தை ரசிகர்களுக்கு வழங்க ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
