‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் படம் தனது வாழ்க்கையையும், உலகளாவிய அடையாளத்தையும் எவ்வாறு மாற்றியது என்பது குறித்து நடிகர் பிரபாஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.
“Baahubali: The Torch Bearer” வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில், உலகின் பல நாடுகளில் மக்கள் தன்னை பெயரால் அல்ல, ‘பாகுபலி’ என்றே அடையாளம் கண்டு அழைப்பதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
“இத்தாலியில் கூட மக்கள் என்னைப் பார்த்து ‘பிரபாஸ்’ என்று அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு அறப்பணிக்காகச் சென்றபோது அங்கிருந்த குழந்தைகள் ‘பாகுபலி’ படத்தை மிகவும் விரும்புவதாகச் சொன்னார்கள். ‘பாகுபலி’க்குப் பிறகு ஏற்பட்ட தாக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது,” என்று அவர் தெரிவித்தார்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தொடர்பான ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் பிரபாஸ் நினைவுகூர்ந்தார்.
“நார்வேயில் ஒருவர் ராஜமௌலி சாரிடம் வந்து, ‘நீங்கள் ஒரு இயக்குநர் என்று நினைக்கிறேன்’ என்றார். பிறகு, ‘நீங்கள்தான் பாகுபலி படத்தின் இயக்குநரா?’ என்று கேட்டார். ‘பாகுபலி’ உலகின் எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது என்பதை அது உணர்த்தியது,” என்றார்.
இந்தப் படம் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றியதாக கூறிய பிரபாஸ்,
“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும் அங்கும் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அப்போது ராஜமௌலி சாருக்கு போன் செய்து, ‘என்னை இந்த ஜென்மத்தில் சுதந்திரமாக பயணம் செய்ய விட மாட்டீர்களா? எனக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை வேண்டாமா?’ என்று நகைச்சுவையாகக் கேட்பேன். முன்பு ஓய்வாக மும்பை அல்லது டெல்லி செல்வேன். இப்போது உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்,” என்று சிரிப்புடன் கூறினார்.
10 ஆண்டுகள் கடந்தும் ‘பாகுபலி’ இந்திய சினிமாவின் மிகப்பெரிய மைல்கல்லாகத் திகழ்கிறது. அந்த வெற்றியின் முகமாகவும், உலக அரங்கில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராகவும் பிரபாஸ் தனது தனித்துவமான இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.