முதலமைச்சர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய விஷால்!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், வழக்கமான மரியாதை பரிசுகளுக்கு பதிலாக சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விலைமதிப்பற்ற பரிசை வழங்கியுள்ளார்.

நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல ஆண்டுகளாக பொருளாதார வசதி குறைந்த மாணவ, மாணவிகளின் கல்விக்காக தொடர்ந்து உதவி செய்து வருகிறார். மேலும், விழாக்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொன்னாடை, பூங்கொத்து போன்ற பாரம்பரிய பரிசுகளை வழங்குவதை தவிர்த்து, அதற்கு மாற்றாக கல்வி உதவிகளை வழங்குவதை தனது வழக்கமாக மாற்றியுள்ளார்.

அந்த வகையில், ஜூன் 15 அன்று முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்த விஷால், அவரது பெயரில் மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதுகுறித்து மாணவிகளின் விவரங்கள் அடங்கிய கடிதத்தையும் அவர் முதலமைச்சரிடம் வழங்கினார்.

அந்தக் கடிதத்தில், “உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்களுக்கான சேவையில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்கள் மீதான மரியாதையின் அடையாளமாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மூன்று மாணவிகளின் உயர் கல்விச் செலவை உங்கள் பெயரில் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

பூங்கொத்து போன்ற தற்காலிகமான பரிசுகளை வழங்குவதைவிட, ஒரு மாணவியின் கல்விக்குத் துணை நிற்பது நீண்டகால நற்பலனை ஏற்படுத்தும். அது அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.

கல்வி உதவி பெறும் மாணவிகள்

எம். லில்லி புஷ்பம் – ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். 12ஆம் வகுப்பில் 437 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவாகும் அவர் B.Sc (Computer Science) படிப்பை தொடர உள்ளார்.

எம். ஹரினி – தினக்கூலி தொழிலாளர்களின் மகளும், குடும்பத்தின் முதல் பட்டதாரியும் ஆவார். 12ஆம் வகுப்பில் 399 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர் BCA படிப்பில் சேர்ந்துள்ளார்.

பி. தர்ஷினி – தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். 12ஆம் வகுப்பில் 431 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர், குடும்பத்தின் முதல் பட்டதாரியாக B.Com (General) படிப்பை பயில உள்ளார்.

நடிகர் விஷாலின் இந்த சமூக அக்கறை மிக்க பரிசை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்ததோடு, “உங்களின் இந்த சேவைப் பயணம் தொடர்ந்து பலரின் வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும்” என பாராட்டியதாக கூறப்படுகிறது.

வழக்கமான பரிசுகளை விட கல்வி உதவியை தேர்வு செய்த விஷாலின் இந்த செயல், சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Chief Minister VijayvijayVishalVishal Presents an Unforgettable Gift to Chief Minister Vijay