‘மகுடம்’ படத்திற்கு இயக்குநர் ஆனது ஏன்?: விஷால் விளக்கம்..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. அதன் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே, அப்படத்தினை விஷாலே இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின.

படப்பிடிப்பு தளத்தில் விஷால் இயக்கும் வீடியோ பதிவு காட்சிகள் இணையத்தில் வெளியானது. தற்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு, ‘மகுடம்’ படத்தை தான் இயக்கி வருவதை விஷால் உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இந்த சிறப்பான நாளில், எனது புதிய படமான ’மகுடம்’ படத்தின் 2-வது போஸ்டர் தீபாவளி வாழ்த்துகளுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே எடுத்திருந்த ஒரு முக்கியமான முடிவை இப்போது நான் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.

’மகுடம்’ எனும் திரைப்படம் எனது திரையுலக பயணத்தில் நான் இயக்குநராக எடுக்கும் முதல் முயற்சி. இப்படி ஒரு சூழ்நிலையை நான் எப்போதும் எதிர்பார்த்தது இல்லை. ஆனால், சில நேரங்களில் சூழ்நிலை நம்மை மிக பொறுப்புடனும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் என் தயாரிப்பாளர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையும் இப்படி ஒரு முடிவை எடுக்க வைக்கின்றன. இந்த முடிவும் அவ்வாறே. இது ஒரு கட்டாய முடிவு அல்ல, பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.

ஒரு நடிகராக நான் எப்போதுமே நம்புவது திரையுலகையும், என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்ட உங்களையும், என்னை நம்பும் தயாரிப்பாளர்களையும்தான். அந்த நம்பிக்கையை காக்கும் பொறுப்பு எனக்கு உண்டு. அதனால் தான் இப்போது நான் இயக்குநராக பொறுப்பேற்று இருக்கிறேன். அதே உணர்வுடன் இந்த தீபாவளிக்கான என் முடிவும் ஒரு புதிய ஒளியான துவக்கம்’ என தெரிவித்துள்ளார்.

vishal clarifies about magudam movie directorial
actor vishalmagudam moviesuper good filmsமகுடம்விஷால்