கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு உள்ளானது.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அறிக்கையில், ‘நடந்த சம்பவத்துக்கான முழுமையான – உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் சிலர் பரப்புகின்ற வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் -அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவர்கள் நம்முடைய தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது, இனிவரும் காலங்களில், எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது, நம் எல்லோருடைய கடமை’ என குறிப்பிட்டுள்ளார்.