அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தை தொடந்து, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், விஜய், 2 நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது எனவும், விமான நிலைய வளாகத்திலிருந்த பொருட்களும் தவெக.வினரால் சேதப்படுத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
இதுதவிர, விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தவெகவினர், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக, கோவை பீளமேடு காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு விமான நிலைய சாலையில் வைக்கப்பட்டிருந்த, திமுக கொடிகளை சேதப்படுத்தியதாகவும் தவெகவினர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் பீளமேடு காவல்துறை நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் மனோஜ் குமார் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.