‘தி டார்க் ஹெவன்’ கூட்டணியில் அடுத்த படப்பிடிப்பு பூஜை தொடங்கியது!

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாலாஜி தனது அடுத்த படைப்பாக ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் மீண்டும் சித்து மற்றும் தர்ஷிகா இணைந்து நடிக்கின்றனர்.

ட்ரீம் 7 சினிமாஸ் தயாரிப்பில் உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி இயக்கியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சித்து, தர்ஷிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அதே கூட்டணி தற்போது ‘தி லாஸ்ட் கேஸ்’ திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகனாக சித்துவும், கதாநாயகியாக தர்ஷிகாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தொடக்க விழா இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

‘ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும். அது குற்றவியல் சார்ந்த கோட்பாடுகளையே மறுபரிசீலனை செய்ய வைக்கும்’ என்ற மையக்கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாலாஜி, “‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றதுடன், செப்டம்பர் 18ஆம் தேதி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியுடன் எங்களுடைய அடுத்த படமான ‘தி லாஸ்ட் கேஸ்’ திரைப்படத்தைத் தொடங்கியுள்ளோம்.

இதுவும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. முந்தைய படத்தில் நடித்த சித்து, தர்ஷிகா, ஜெயக்குமார் ஆகியோர் இந்தப் படத்திலும் நடிக்கின்றனர். மேலும், புதிய நடிகர்களும் இணைகின்றனர். முந்தைய படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் தொடர்கின்றனர்.

மலைப்பகுதியில் நடைபெறும் குற்றப் புலனாய்வை மையமாகக் கொண்ட கதைதான் என்றாலும், முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இப்படத்தின் நிலப்பரப்பு மற்றும் இயற்கை சார்ந்த காட்சிகள் கதைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும்.

- Advertisement -

முந்தைய படத்தில் கதை சொல்லும் முறையும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் வித்தியாசமாக இருந்தன. ஆனால், இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஆழமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கும்.

‘தி டார்க் ஹெவன்’ படத்தின் வெற்றிக்கு ஊடகங்களின் ஆதரவு மிக முக்கியமான காரணம். அதனால்தான் உங்கள் முன்னிலையில் இந்தப் படத்தையும் தொடங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவு தேவை.

ஒரே படக்குழுவினர் இணைந்து பணியாற்றினாலும், முந்தைய படத்தின் சாயல் இதில் இருக்காது. ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். முந்தைய படத்தில் பேண்டஸி அம்சங்கள் இருந்தன. ஆனால், இதில் அத்தகைய அம்சங்கள் இருக்காது. அதேபோல், இந்தப் படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையின் பின்னணியில் உண்மைச் சம்பவங்கள் உள்ளன என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன். படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய கதாநாயகன் சித்து, “நான் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும், என்னுடைய வெற்றிப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்தான். இயக்குநர் பாலாஜி அந்தப் படத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்து, வெற்றிப் பாதையில் பயணிக்க வழிவகுத்தார்.

அந்தப் படத்தின் வெற்றியை நான் முழுமையாக அனுபவித்தேன். நான் செல்லும் இடமெல்லாம் அந்தப் படத்தின் வரவேற்பைப் பார்க்க முடிந்தது. அதற்கு முன்பு என்னைச் சந்திப்பவர்கள் தொலைக்காட்சியில் நடித்ததைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் நான் நடித்த ‘பாரி’ கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி அழைக்கத் தொடங்கினார்கள். பலரும் என்னைப் பார்த்து ‘பாரி… பாரி…’ என்று அழைத்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்தப் படமும் அந்த வெற்றியைத் தொடரும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை தர்ஷிகா பேசுகையில், “‘தி டார்க் ஹெவன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. அதற்குள் படம் வெளியாகி வெற்றி பெற்று, அடுத்த படத்தையும் தொடங்கியிருப்பது நம்ப முடியாத மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படமும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, எனக்குப் பெயர் சொல்லும் வகையிலான கதாபாத்திரம் இதில் அமைந்துள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் குணச்சித்திர நடிகர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால், சரண், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

sidhuTharshikaThe Dark HeavenThe Last CaseThe Next Film from The Dark Heaven Team Begins with a Pooja Ceremony