நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் கிஷன் – இயக்குநர் கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வலுவான படைப்புகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், மீண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியுடன் களமிறங்கியுள்ளது.
திரையுலகில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சந்தீப் கிஷன், தனது பயணத்தில் முக்கியமான மைல் கல்லை எட்டியுள்ள இந்த நேரத்தில், இந்த படத்தின் மூலம் புதிய பரிமாணத்தில் தோன்ற உள்ளார். கதைக்களத்தில் ஆழமும், உணர்ச்சியும் கலந்த படைப்புகளை வழங்கும் திறமையான இயக்குநர் கிருஷ்ண சைதன்யா, இந்த படத்திலும் விறுவிறுப்பான கதை சொல்லும் முறையை எடுத்துக்காட்ட உள்ளார்.
‘பவர் பேட்டா’ என்ற தலைப்பே சக்தி, அரசியல் மற்றும் வியூகங்களை நினைவூட்டுகிறது. வெளியிடப்பட்ட டைட்டில் போஸ்டர் இருண்ட மற்றும் யதார்த்தமான காட்சியமைப்பில் கவனம் ஈர்க்கிறது. ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகை, உடைந்த காய்கள் மற்றும் நசுங்கிய ரோஜா மலர் போன்ற சின்னங்கள் மூலம் காதல், கௌரவம், அதிகாரம் ஆகியவை மோதும் கதைக்களத்தை சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதையை படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் படம் பலம் வாய்ந்த அணியை கொண்டுள்ளது. இசையமைப்பாளராக மனி ஷர்மா, ஒளிப்பதிவாளராக மதி, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணியாற்றுகின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா கவனிக்க, ஒலி வடிவமைப்பை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் மேற்கொள்கிறார்கள்.
ஆர்வத்தை தூண்டும் தலைப்பும், தாக்கம் அளிக்கும் போஸ்டரும் இணைந்த ‘பவர் பேட்டா’ திரைப்படம், தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் அதிகாரப் போட்டி மோதும் ஒரு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.