சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார் சிம்பு.
அவ்வகையில், வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘சிம்புவை வைத்து இயக்கும் படம் 5 எபிசோடுகளாக இருக்கும். தற்போது 1 மணி 15 நிமிடம் படம் உள்ளது. ஒரு எபிசோடு கூட முடியவில்லை. என்ன செய்யப்போறேன் என தெரியவில்லை. அத்துடன் ‘எஸ்டிஆர் 49′ 2 பாகங்களாக இருக்கலாம்’ என கூறியுள்ளார்.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்துடைய 2-ம் பாகமே பல வருடங்களாகி துவங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், தற்போது ‘எஸ்டிஆர் 49’ படம் 2 பாகங்களாக உருவாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையில் வெற்றிமாறன் தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘எஸ்டிஆர் 49’ படம் தொடர்பான ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டது. இதில், சிம்பு 80-ஸ் கெட்டப்பில் தோன்றி இருந்தார். அவர் நடந்து வருவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்த ப்ரொமோவில், சிம்புவின் முகம் காட்டப்படவில்லை. அத்துடன் வடசென்னை படத்தில் வருவதை போன்ற ஸ்டைலில், ‘எஸ்டிஆர் 49’ படக்குழுவினரின் பெயர்கள் வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இதனால், வடசென்னை யூனிவர்ஸில் எஸ்டிஆர் இணைந்து விட்டதாக சிம்பு ரசிகர்கள் கொண்டாடினர்.
தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பினை பெற்ற ‘வடசென்னை’ படத்துக்கு முன்பாக நடக்கும் கதைக்களமாக ‘எஸ்டிஆர் 49’ படத்தினை இயக்குகிறார் வெற்றிமாறன். இதனால், வடசென்னையில் இடம்பெற்ற அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் சிம்புவின் படத்திலும் இடம்பெற இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.