நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘சூரி 7’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனம் ஈர்த்து வரும் நடிகர் சூரி, தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக ‘சூரி 7’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், கதாநாயகனாக சூரி நடிக்கும் ஏழாவது திரைப்படமாகும். அதேபோல், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நான்காவது தமிழ்ப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா அக்டோபர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர்கள் மதிமாறன், கீர்த்தீஸ்வரன், ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ்க்குமரன், பாந்தம் பிலிம்ஸ் பிஜாய் அற்புதராஜ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். புதுமையான கதைக்களங்களை நகைச்சுவையுடன் இணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் திரைப்படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற ரவிக்குமார், சூரியுடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.
படத்தின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, ‘ரணபலி’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், ‘சூரி 7’ படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னைக்கு வந்தார்.
- Advertisement -
இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழில் நாங்கள் தயாரித்த ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’, ‘இருமுடி’ ஆகிய படங்களுக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும், இம்மொழியில் மேலும் பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது. தற்போது சூரி நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறோம். இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கும் சூரிக்கும் இடையேயான நட்பையும் அன்பையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. விழாவில் பங்கேற்ற எல்ரெட் குமார் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு நன்றி. கதாநாயகனாக சூரி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது திறமைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் நியாயம் செய்யும் வகையில் அவரைத் திரையில் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. மிகுந்த உற்சாகத்துடன் இப்படத்தைத் தொடங்குகிறோம். இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
‘விடுதலை பாகம் 1’, ‘விடுதலை பாகம் 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய சூரி, கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அவரது சமீபத்திய வெளியீடான ‘மண்டாடி’ திரைப்படமும் வசூல் ரீதியாக அவருக்கு வலுசேர்த்துள்ள நிலையில், ‘சூரி 7’ அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தமிழில் தொடர்ந்து புதிய படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், சூரியுடன் இணைந்துள்ள இந்தப் படமும் கவனம் பெற்றுள்ளது.
இப்படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.