பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதேசமயம், அவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள சாதனையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, ஜி.வி. பிரகாஷ் இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் வேல்முருகன், தனது அன்பின் அடையாளமாக “100 Films GV Sir” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை ஜி.வி. பிரகாஷுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் வேல்முருகனின் மகளும், இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனும் உடனிருந்தனர்.
நாட்டுப்புறப் பாடல்களால் தனக்கென தனி அடையாளம் உருவாக்கியுள்ள வேல்முருகன், தனது இசைப் பயணத்தில் ஜி.வி. பிரகாஷின் பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார். ஏற்கனவே சில திரைப்படங்களில் பாடியிருந்தாலும், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த சொல்லால’ பாடல் மூலமே தனக்கு மிகப்பெரிய அடையாளமும், அங்கீகாரமும் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ‘சகுனி’, ‘கொம்பன்’, ‘செம’, ‘அசுரன்’, ‘யானை’, ‘வீர தீர சூரன்’, ‘தாண்டவம்’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘ரெபல்’ உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கிய ஜி.வி. பிரகாஷ், தனது இசை வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.
மேலும், ‘போட்டது பத்தல’, ‘கருப்பு நிறத்தழகி’, ‘கத்தரிப் பூவழகி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், “ஆடுகளம் முதல் அண்மையில் வெளியான ‘பராசக்தி’ வரை சுமார் 25 படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து என் வாழ்க்கையில் ஒளியேற்றிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த பரிசை வழங்கினேன். இன்று நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணம் அவர் கொடுத்த பாடல் வாய்ப்புகள்தான். அவருக்கு என்னுடைய அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் சிறிய முயற்சிதான் இது. இன்று அவரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷின் பிறந்தநாளில் வேல்முருகன் அளித்த இந்த அன்புப் பரிசும், அவர்களின் நீண்டகால நட்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.