புகழ் பெற்ற பாடகியாக வலம் வரும் சின்மயி, கடந்த 2018-ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் ஒன்றை தெரிவித்தார். அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மிகப் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது.
இந்தப் புகார் தெரிவிக்கும் முன்புவரை சினிமாவில் முன்னணி பாடகியாக வந்த சின்மயிக்கு, மீடூ புகாருக்குப் பின் யாருமே பட வாய்ப்பு தரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை டப்பிங் யூனியனில் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேசத் தடை விதித்தனர். இதனால், சுமார் 5 ஆண்டுகள் பட வாய்ப்புகளின்றி இருந்தார் சின்மயி.
இந்த தடையையும் மீறி, லோகேஷ் கனகராஜ் போன்ற சில இயக்குனர்கள் சின்மயிக்கு வாய்ப்பு தந்தனர். அவ்வகையில் அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தின் ‘முத்த மழை’ என்கிற பாடலை ஆடியோ லாஞ்சில் பாட வாய்ப்பு கிடைத்தது. அவர் பாடிய அந்த வீடியோ மிகவும் வைரலானதை தொடர்ந்து சின்மயிக்கு வாய்ப்பு தர வேண்டும் என நெட்டிசன்களும் வலியுறுத்த தொடங்கினர். இதனால் மீண்டும் அவருக்கு சினிமாவில் பழையபடி வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன. இமான் இசையிலும் பாடவுள்ளார்.
இந்நிலையில், அவர் வைரமுத்து பற்றி முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, ‘திரையுலகில் யாரைக் கேட்டாலும், இவர் உத்தமர் என யாருமே சொல்ல மாட்டார்கள். ரகுமான் சார் அவர்களின் ஸ்டுடியோவுக்கு சென்றால், பத்திரமாக பாடிவிட்டு திரும்பி வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும்.
‘இரண்டு மணி நேரம் தனியாக இவருடன் விட்டால், தன்னுடைய மகள் பத்திரமாக இருப்பாள் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்’ இவருக்கு சப்போர்ட் பண்ணும் அரசியல்வாதிகளுக்கு சவால் விடுகிறேன்.
‘பொண்ணு மேல என்னால கை வைக்க முடியும்’ என்கிற தைரியம் அந்த ஆளுக்கு இருக்கிறது. அவருக்கு அரசியல் பலம் இருந்தது, இன்னும் இருக்கிறது. அந்த ஆளுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சப்போர்ட் பண்ணுகிறார்கள்.
அவர், என்னைக்கட்டி அணைக்கும்போது, ஏதோ தப்பா இருக்கிறதே எனத் தோன்றியது. அதன்பின், என் கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. அதன்பின், அங்கிருந்து பதறி அடித்துக்கொண்டு கீழே ஓடி வந்தேன்.
இத்தனைக்கும் எங்க அம்மா கீழே இருந்தார். அது தெரிந்தும் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். பின்னர், காரில் ஏறியதும் அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்பதை சொன்னேன்’ என சின்மயி கூறியுள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.