செவிலியர்கள் கஷ்டம் பேசும் செய் செய்யாதே படம் – ஹெச். ராஜா

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறையினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு பாராட்டு தெரிவித்த சிறப்பு விருந்தினர்கள், சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட இந்தப் படம் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

“தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதவை” – ஃபைவ் ஸ்டார் கதிரேசன்

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பல ஆண்டுகளாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே பயணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தான் தயாரித்த ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தை உதாரணமாகக் கூறிய அவர், “ஒரு ரவுடியின் வாழ்க்கையையே சினிமா மாற்றியது. ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களைக்கூட மாற்றும் சக்தி கலைக்கும், குறிப்பாக சினிமாவுக்கும் இருக்கிறது” என்றார்.

மேலும், ஹெச். ராஜா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும், மருத்துவராக உயர்ந்த நிலையில் இருந்த டாக்டர் எஸ். ராஜா, சினிமா மீதான ஆர்வத்தால் அமெரிக்காவிலிருந்து வந்து இந்தப் படத்தை இயக்கியிருப்பது சினிமாவின் ஈர்ப்பை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

“அரசியலில் இருந்தவர் சமூகப் படத்தை இயக்குவது பாராட்டுக்குரியது” – தமிழிசை சௌந்தரராஜன்

முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அரசியலில் இருந்த ஒருவர் திரைத்துறைக்கு வந்து சமூகப் பொறுப்புள்ள படத்தை உருவாக்குவது மிகவும் பாராட்டத்தக்கது” என்றார்.

மதுரையுடன் தனக்கு உள்ள உணர்வுப்பூர்வமான தொடர்பை பகிர்ந்த அவர், மருத்துவ விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு மற்றும் நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

“போதைப்பொருள், சுயமருந்து உள்ளிட்ட பிரச்சினைகளை படம் பேசுகிறது” – இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா

இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA), இந்தப் படம் மருத்துவத் துறையை மட்டுமல்லாமல், இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், பெற்றோர்–ஆசிரியர்கள்–மருத்துவர்களின் பொறுப்பு போன்ற முக்கிய சமூகக் கருத்துகளையும் பேசுகிறது என்றார்.

அமெரிக்காவிலிருந்து பலமுறை வந்து பல சிரமங்களுக்கு மத்தியில் இப்படத்தை உருவாக்கியதாக கூறிய அவர், ஹெச். ராஜா எந்தவித சம்பளமும் பெறாமல் இந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், அவரது நடிப்பை பாராட்டிய இயக்குநர், “சிவாஜி கணேசன் போன்ற அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரை வைத்து ‘தேவர் மகன் 2’ போன்ற படத்தை இயக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றும் கூறினார்.

“செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் தியாகத்தை பேசும் படம்” – ஹெச். ராஜா

தமிழக அரசியல் பிரமுகர் ஹெச். ராஜா, தனது உடல்நலக் குறைபாட்டின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், “இந்தப் படத்தில் எந்த நடிகருக்கும் மேக்கப் பயன்படுத்தப்படவில்லை. அனைவரும் இயல்பான தோற்றத்தில் நடித்துள்ளோம். வணிக நோக்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், சமூகப் பொறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்” என்றார்.

இப்படம் மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் தியாகங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

சமூகச் செய்தியுடன் உருவான திரைப்படம்

‘செய்! செய்யாதே!’ திரைப்படம் மருத்துவ விழிப்புணர்வு, மனிதநேயம், குடும்ப மதிப்புகள், பொறுப்பான சுகாதார சேவை, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் தவறான மருத்துவ தகவல்களின் ஆபத்து போன்ற பல முக்கியமான சமூகக் கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) இயக்கியுள்ளார். தயாரிப்பாளராக சுப்புலட்சுமி ஜெயராம் பணியாற்றியுள்ளார்.

படத்தில் ஹெச். ராஜா தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதுடன், குரு விஜய், தர்ஷினி ரெட்டி, பிரதிக்ஷா மனோ பிரசாந்த், சிதம்பரம் PDK, மௌனிகா ப்ரீத்தி, தபிதா குணரத்னே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் 2026 செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

h.rajaSei SeiyaadheSei Seiyaadhe Brings Nurses Struggles to the Big Screen - H Raja